தலச்சிறப்பு |
பிரளயம் ஏற்பட்டு உலக ஜீவராசிகள் அனைத்தும் அழிந்து விட்டன. மீண்டும் உலகைப் படைக்க நினைத்த பிரம்மதேவன், இத்தலத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்ட பிறகுதான் படைப்புத் தொழிலைத் தொடங்கினார் என்று தலபுராணம் கூறுகிறது. எனவே, இத்தலத்து மூலவர் 'ஆதிபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார். புற்று வடிவில் உள்ளதால் 'புற்றிடங்கொண்டார்' என்றும் அழைக்கப்படுகின்றார். பிரளயம் இத்தலத்தை ஒற்றிச் (விலகிச்) சென்றதால் 'ஒற்றியூர்' என்று வழங்கப்படுகிறது.
ஒருமுறை இப்பகுதியை ஆண்டுவந்த அரசன் தனது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்க வேண்டும் என்று ஓலையில் எழுதி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தான். அதிகாரிகள் திருவொற்றியூர் தவிர மற்ற இடங்களில் வரி வசூல் செய்து அரசனிடம் கொடுத்தனர். திருவொற்றியூரில் ஏன் வரி வசூல் செய்யவில்லை என்று அரசன் வினவ, ஓலையில் 'ஒற்றியூர் நீங்கலாக' என்று எழுதியிருந்ததை அதிகாரிகள் காட்டினர். தான் எழுதியது எப்படி மாறியது என்று திகைத்த மன்னன் வேறு ஒரு ஓலையில் எழுதித் தர, அந்த ஓலையிலும் 'ஒற்றியூர் நீங்கலாக' என்ற எழுத்து தெரிந்தது. இதைக் கண்ட அரசன் இதை எழுதியது ஒற்றியூர் இறைவனே என்று உணர்ந்து அப்பகுதியில் வரி வசூல் செய்யாமல் விட்டுவிட்டான். ஓலையில் இறைவன் எழுதியதால் 'எழுத்தறிநாதர்' என்று பெயர் பெற்றார்.
மூலவர் 'ஆதிபுரீஸ்வரர்', 'புற்றிடங்கொண்டார்', 'படம்பக்க நாதர்' என்னும் திருநாமங்களுடன், சதுர வடிவ ஆவுடையுடன் மிகப்பெரிய புற்று லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மூலவர் மீது கவசம் சாத்தப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி முதல் மூன்று நாட்கள் கவசம் நீக்கப்பட்டு மீண்டும் சாத்தப்படுகிறது.
அம்பாள் 'வடிவுடையம்மை', திரிபுரசுந்தரியம்மை என்னும் திருநாமங்களுடன் வெளிப்பிரகாரத்தில் தனி சன்னதியில் காட்சி அளிக்கின்றாள். பௌர்ணமியும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் நன்னாளில் காலை வேளையில் சென்னையை அடுத்த மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் எழுந்தருளியிருக்கும் திருவுடை அம்மனையும், உச்சிக்கால பூஜைக்கு இத்தலத்து வடிவுடை அம்மனையும், மாலையில் சென்னையை வடக்கே இருக்கும் திருமுல்லைவாயிலில் உள்ள கொடியிடை அம்மனையும் தரிசனம் செய்கின்றனர். இந்த மூன்று சிலைகளும் ஒரே சிற்பியால், ஒரே அளவில் செதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் இக்ஷீ பீடத் தலமாக விளங்குகிறது. இங்கு அம்பாள் கிரியா சக்தியின் வடிவமாகப் வணங்கப்படுகின்றாள்.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். உள்பிரகாரத்தில் குணாலய ஏரம்ப விநாயகர், அறுபத்து மூவர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், நடராஜர், கலிய நாயனார், ஆதி சங்கரர், அருணகிரிநாதர், பைரவர் சன்னதிகள் உள்ளன.
உள்பிரகாரத்தில் வட்டப்பாறை அம்மன் சன்னதி உள்ளது. ஆதிசங்கரர் தமது தவவலிமையால் காளியின் வடிவமாகப் போற்றப்படும் இந்த அம்மனின் உக்கிரத்தைக் குறைக்க சக்கரம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார் என்றும் தலவரலாறு கூறுகிறது. எனவே வட்டப்பாறை அம்மனை மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக மக்கள் வணங்குகின்றனர். இந்த அம்மனுக்குத் தனி கொடிமரமும், தனியாக உற்சவங்களும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்பிரகாரத்தில் ஜெகதாம்பிகை சமேத ஜெகந்நாதர், அமிர்தகடேஸ்வரர், சூரியன், சுந்தரர், சங்கலி நாச்சியார், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், சகஸ்ரலிங்கம், ஏகாம்பரநாதர், இராமநாதர், கௌடீஸ்வரர், 6 அடி உயர ஆகாச லிங்கம், அண்ணாமலையார், ஜம்புகேஸ்வரர், நளலிங்கம், காளத்திநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், குழந்தையீசர் என்னும் திருநாமத்துடன் முருகன், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர். மேலும் 27 நட்சத்திரங்களின் பெயரில் 27 லிங்கங்கள் வரிசையாக தனித்தனி சன்னதிகளில் உள்ளன.
63 நாயன்மார்களுள் ஒருவரான சுந்தரர் சங்கிலி நாச்சியாரை இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில்தான் திருமணம் செய்துக் கொண்டார். சிவபெருமானை சாட்சியாக வைத்து நடந்த இந்த திருமணம் மாசி மகத்தன்று நடைபெற்றது. எனவே, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசிமக பிரம்மோற்சவ திருவிழாவின்போது சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், அறுபத்து மூவர் உற்சவமும் நடைபெறும். பின்னர் சத்தியத்தை மீறி அவர் திருவாரூர் செல்ல எல்லை தாண்டியபோது சுந்தரரின் பார்வை பறிபோனது.
அசுரர்களுடன் நடந்த போரில் தேவர்களுக்கு, முசுகுந்த சக்கரவர்த்தி உதவி செய்ததால் இந்திரனிடம் இருந்து பத்து தியாகராஜர் திருவுருவங்களைப் பெற்றார். அவற்றில் ஏழு திருவுருவங்களைத் திருவாரூரைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் நிறுவினார். அவை 'சப்த விடங்கத் தலங்கள்' என்று அழைக்கப்படுகிறது. மற்ற மூன்று திருவுருவங்களை தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர், திருவான்மியூர், திருக்கச்சூர் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்தார். இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியாகராஜரை 'மாணிக்கத் தியாகர்' என்று அழைப்பர். மாசி மாதப் பிரம்மோற்சவத்தின்போது பௌர்ணமி அன்று இரவு இவரது திருநடனம் நடைபெறும்.
63 நாயன்மார்களுள் ஒருவரான கலிய நாயனார் திருவிளக்கு ஏற்றி வழிபட்டு முக்தி அடைந்த தலம் இது. அவரது திருவுருவம் உள் பிரகாரத்தில் உள்ளது. பட்டினத்தார் முக்தியடைந்த தலம். அருகில் கடற்கரையொட்டிய சாலையில் அவரது சமாதிக் கோயில் தற்போது பெரிதாகக் கட்டப்பட்டுள்ளது. வள்ளலார் இத்தலத்து அம்மன் மீது 'வடிவுடை மாணிக்கமாலை' என்னும் பாடல்களை இயற்றியுள்ளார்.
திருமால், பிரம்மா, இந்திரன், ஆதிசேஷன், நாரதர், சந்திரன், அகத்தியர், வால்மீகி, உரோமச முனிவர், லவ-குசர்களில் ஒருவரான லவன், ஐயடிகள் காடவர்கோன், ஆதிசங்கரர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார், ஒற்றியூர் ஞானப்பிரகாசர், உமாபதி சிவாச்சாரியார், கம்பர், கவி காளமேகம், இரட்டைப் புலவர்கள், சத்குரு தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஐந்து பதிகங்களும், சுந்தரர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர். இத்தலத்தைப் பற்றி பட்டினத்துப் பிள்ளையார் பாடிய பாடல்கள் 11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|